Friday, February 10, 2012

உசிலம்பட்டி சங்கர் போட்டோகிராபர்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கடைசி நாள்...

உசிலம்பட்டி சங்கர் போட்டோகிராபர்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கடைசி நாள்...உசிலம்பட்டி சங்கர் போட்டோகிராபர்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கடைசி நாள்...SocialTwist Tell-a-Friend

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கடைசி நாள்...

தேவர் சமூகத்தின் மாபெரும் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் தமது 56வது வயதில் காலமானார். கடந்த 2 ஆண்டு காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்த தேவர், முதலில் மதுரை ஆஸ்பத்திரியிலும் பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்றார். சிறுநீரகக் கோளாறுக்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று வேலூர் டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர். ஆனால் தேவர் மறுத்துவிட்டார். மதுரையை அடுத்த திருநகரில் உள்ள அவர் வீட்டில் தங்கி, நாட்டு மருந்துகளை மட்டும் சாப்பிட்டு வந்தார்.

உடல் நிலை மோசம் அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி, 1963 அக்டோபர் 29 அதிகாலை 4.50 மணிக்கு (பிறந்த நாளுக்கு ஒரு நாளுக்கு முன்) காலமானார். "என் உடலை, சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யவேண்டும்" என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு (ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா) தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது. தேவர் மரணம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம், 30ந்தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

தி.மு.கழகத் தலைவர் அண்ணா, அமைப்புச் செயலாளர் என்.வி.நடராசன், அன்பழகன், நடிகர்கள் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, சட்டசபை உறுப்பினர்கள் சசிவர்ணதேவர், சீமைசாமி, தமிழ்நாடு சுதந்திரா கட்சித் தலைவர் சா.கணேசன், எஸ்.எஸ்.மாரிசாமி, மூக்கைய தேவர், அன்பில் தர்மலிங்கம் மற்றும் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம், தேவரின் தோட்டத்தை அடைந்தது. அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே நடந்த அனுதாபக் கூட்டத்தில், அனைத்துக்கட்சியினர் பேசினார்கள்.
 அண்ணா பேசுகையில் கூறியதாவது:_
"தேவரை இழந்தது எனக்கு தாங்க முடியாத வேதனை அளிக்கிறது. தென்பாண்டி மக்களின் இதயத்தைக் கவர்ந்த தலைவர் அவர். எது எது மக்களுக்குத் தேவையோ, அவைகளையெல்லாம் வீரத்தோடும், அஞ்சா நெஞ்சத்தோடும் எடுத்துச் சொன்னார். ஒருமுறை சட்டசபையில் அவரைப் பாராட்டி நான் பேசினேன். "உங்களைத் திட்டும் தேவரை நீங்கள் பாராட்டலாமா?" என்று சிலர் கேட்டார்கள். "அவர் செய்யும் நல்ல செயல்களை எடுத்துச் சொல்லாவிட்டால் என் மனச்சாட்சிக்கு துரோகம் செய்தவன் ஆவேன்" என்று பதில் அளித்தேன்."

இவ்வாறு அண்ணா கூறினார்.

தேவர் மறைவு குறித்து, காமராஜர் விடுத்த அனுதாபச் செய்தியில், "தேவர் மரணம் குறித்து மிகவும் வருந்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தில், வீரத்துடன் ஈடுபட்டார். மனதில் சரி என்று பட்ட கொள்கையை தைரியத்துடன் சொல்லக்கூடியவர்" என்று குறிப்பிட்டு இருந்தார். சுதந்திரா கட்சித் தலைவர் ராஜாஜி விடுத்த செய்தியில், "நேர்மை, பக்தி, தைரியம் ஆகி யவை ஒரு தனி மனிதனை நன்கு பிரகாசிக்கச் செய்யும். அந்தப் பண்புகளைக் கொண்டவர் முத்துராமலிங்க தேவர். அதனால் அவர் புகழுடன் பிரகாசித்தார்" என்று கூறியிருந்தார்.

முத்துராமலிங்கதேவர், 1908ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ந்தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னை அடுத்த புளிச்சுகுளம் என்ற கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் உக்கிரபாண்டியத் தேவர் இந்திராணி அம்மாள். பிறந்த ஆறாவது மாதத்திலேயே தாயாரை இழந்த தேவர், பாட்டியின் ஆதரவில் வளர்ந்தார். 1927ம் ஆண்டில் முத்து ராமலிங்க தேவர் காங்கிரசில் சேர்ந்தார். சுதந்திரப் போராட் டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார். வெள்ளைக்காரர்களை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை திரட்டியபோது, அவருக்கு ஆதர வாக தீவிர பிரசாரம் செய்தார்.

அப்போது 5 ஆண்டு ஜெயில் தண்டனை அடைந்தார். 1948ம் ஆண்டில், காங்கிரசை விட்டு விலகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவக்கிய பார்வர்டு "பிளாக்" கட்சியில் சேர்ந்தார். முத்துராமலிங்க தேவர், நீண்ட காலம் சட்டசபை உறுப்பினராக இருந்திருக்கிறார். 1937ம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் இருந்து தமிழ் நாடு சட்டசபைக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டார். பிறகு 1947ம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.



1952ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் (2 தொகுதிகளில்) காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி கிடைத்தது. அதில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு 1957ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்நாடு சட்டசபைக்கு முதுகுளத்தூர் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்று, சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 1962 பிப்ரவரி மாதம் நடந்த பொதுத்தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். நேதாஜியும், முத்துராமலிங்க தேவரும் சகோதர பாசம் கொண்டிருந்தனர். 1939ம் ஆண்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்து எடுக்கப்பட்டபோது, அவர் வெற்றிக்கு தேவர் உழைத்தார்.

கல்கத்தாவில் நடந்த விழாவுக்கு, தேவரை நேதாஜி அழைத்தார். "முத்து ராமலிங்கம், என் தம்பி" என்று கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார். தேவரைக் கட்டித்தழுவி, "நான் வடநாட்டு போஸ்; நீ தென்நாட்டு போஸ்" என்று வாழ்த்தினார். 1957 செப்டம்பர் மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடையே கலவரம் நடந்தது.

அப்போது இமானுவேல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், முத்துராமலிங்கதேவரும் குற்றம்சாட்டப்பட்டார். முடிவில், நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். பத்தாம் வகுப்பு வரை படித்த தேவர், ஆங்கிலத்திலும், தமிழிலும் மணிக்கணக்கில் பேசக் கூடிய ஆற்றல் படைத்தவர்.

தமிழ் நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 20,075. அதில் சிறையில் கழித்த நாட்கள் 4,000. ஜமீன் பரம்பரையில் பிறந்தாலும், எளிய வாழ்க்கை நடத்தினார்.

33 கிராமங்களுக்கு சொந்தக்காரர் என்றாலும், வருமானத்தில் பெரும் பகுதியை ஏழை மக்களுக்காக செலவிட்டார். பொதுத்தொண்டு செய்வதை முழு நேரப்பணியாக மேற்கொள்ள விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல் துறவிபோல் வாழ்ந்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கடைசி நாள்...SocialTwist Tell-a-Friend

Marriage group died in well. Go well soon. மரணக்குழி ஆனது கிணறு...

தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து தூத்துக்குடி திரும்பிக் கொண்டிருந்த திருமணக் கோஷ்டியின் வேன்,
திருமங்கலம் அருகே நக்கலகோட்டை எனும் கிராமத்தில் சாலை ஓரம் இருந்த 60-அடி ஆழ கிணற்றில் பாய்ந்தது.
இந்த விபத்தில் 3-ஆண்கள் மட்டும் உயிர் தப்பினர்.
4-பெண்கள்,3-ஆண்கள்,3-குழந்தைகள் உட்பட 10-பேர் தண்ணீரில் மூழ்கி உயிர் இழந்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் ,
மதுரை மாவட்ட s.p.ஆஸ்ராகர்க்,
திருமங்கலம் m.l.a.முத்துராமலிங்கம்,
மேற்பார்வையில் 10-உடல்களும் மீட்கப்பட்டன.
நேற்று மாலை சுமார் 6.30 மணிக்கு நடந்த இந்த கோர விபத்து இன்று காலை (10.2.12)-வரை மீட்பு பனி நடந்தது.
 யார் பொறுப்பு?
வேன் ஓட்டுநரின் கவனமின்மை,
சாலையில் இருந்த வேகத்தடை,
சாலையோரம் மூடாமல் இருந்த மரணகிணறு,
என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும்
உயிர்களின் இழப்பு எவ்வளவு கொடுமையானது?
சாபக்கேடு.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு
பெரிய விபத்து நடந்தவுடன்
அவசர சட்டங்கள் இயற்றுவதும்,
பின்பு வசதியாக மறந்து விடுவதும்,
இயல்பு. 

கிணற்று நீரை வெளியேற்ற
உயர் மின் மோட்டார் கூட
தீயணைப்பு வண்டியில் இல்லை.
m.l.a.முத்துராமலிங்கம் ஒரு கல்குவாரியில்
இருந்து மோட்டார் கொண்டு வர செய்தார்.
விபத்து நடந்த போது அங்கு மின்சாரம் இல்லை.
மின்சாரம் இருந்திருந்தால் இன்னும் சிலரை
உயிருடன் மீட்டு இருக்கலாம் என விபத்தை நேரில்
பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
மேலக்கால் எனும் கிராமத்தை சேர்ந்த சிலர்
நீண்ட முயற்சிக்கு பின் கடைசி 4-சடலங்களை மீட்டனர்.
 
இதுபோன்ற விபத்துக்கள் நடக்கும் பொழுது
மீட்பு பணியை துரிதபடுத்ததீயணைப்பு துறைக்கு சில அதிரடி பயிற்சிகள் தேவை.


Marriage group died in well. Go well soon. மரணக்குழி ஆனது கிணறு...SocialTwist Tell-a-Friend