Friday, May 6, 2011

அரசின் இலவசமும்,மின்வெட்டும்...


"பாஞ்சாலியை வைத்து சூதாடிய மகாபாரதத்து தருமன் போல்' மாநிலம் துகில் உரியப்படும் போது, கையாலாகாதவர்களாக கலங்கி நிற்கிறோம். 
தமிழகத்தில், தேவைகேற்ப மின் உற்பத்தியை அதிகரிப்பதில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தவில்லை. நீண்டகால திட்டமிடல், தொலைநோக்கு பார்வை இல்லாததால், இன்று மின்வெட்டால் தவிக்கிறது தமிழகம்.

தற்போது, தமிழகத்தின் மொத்த மின்சார உற்பத்தி நிறுவுதிறன், 15 ஆயிரத்து 100 மெகாவாட். ஆனால், 8,000 முதல் 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது. நமது தேவை தற்போது, 10 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. 1,500 மெகாவாட் பற்றாக்குறை உள்ளது.மத்திய மின்துறை ஆய்வுப்படி, இன்னும் இரண்டு ஆண்டுகளில், 1,875 மெகாவாட் பற்றாக்குறை ஏற்படும். இந்த தேவையை சரிசெய்யவே இன்னும் பல ஆண்டுகள் ஆகும். அதுவரையிலும் காற்றாலை மின் உற்பத்தியை எதிர்பார்க்க வேண்டி உள்ளது.

தற்போதும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருங்காலங்களில் மின்தேவை இன்னும் அதிகமாகும்; பற்றாக்குறை கடுமையாகும். அரசியல்வாதிகள் ஓட்டுக்காக திட்டமிடாமல், நாட்டுக்காக திட்டமிட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.சென்னை நகரை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில், இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. தேர்தலுக்கு பின், ஏப்., 21 முதல், சென்னை நகரத்திற்கு ஒரு மணி நேரமும், மற்ற ஊர்களுக்கு மூன்று மணிநேரமும் மின் வெட்டு செய்யப்படுகிறது.தமிழகத்தில், 2001 கணக்குப்படி மொத்த மக்கள் தொகை, 7 கோடியே, 21 லட்சத்து, 38 ஆயிரத்து 958. இவர்களில் சென்னை நகரில் மட்டும், 65 லட்சத்து, 60 ஆயிரத்து, 242 பேர் வசிக்கின்றனர். மீதம் சென்னை புறநகர் மற்றும் தமிழகம் முழுவதும், 6 கோடியே, 55 லட்சத்து, 78 ஆயிரத்து 716 பேர்.
சென்னைவாசிகளைப்போல் தான் மாநிலத்தின் பிற பகுதிகளில் வசிப்போரும் அரசுக்கு வரி செலுத்துகின்றனர். ஆனால், சென்னையில் மட்டும் மின்வெட்டு ஒரு மணி நேரம் என்பது எந்த வகையில் நியாயம். அனைத்து பகுதி மக்களையும் ஒரே மாதிரியல்லவா அரசு நடத்த வேண்டும்.சென்னைவாசிகள் மட்டும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் போலவும், மற்ற மாவட்ட மக்கள் சாபம் பெற்றவர்கள் போலவும் நடத்தப்படுவது ஏன்? முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் தங்களுக்கு சிரமம் வரக்கூடாது என, சென்னையில் செய்து கொண்ட ஏற்பாடா இது? சென்னை நகர வாசிகளுக்கு மட்டும் தனியாக சட்டம் இயற்றியது போல் மின்வாரியம் செயல்படுகிறதே.இது, ஒரு கண்ணில் வெண்ணெயும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைத்தது போல் உள்ளது.

மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு, மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து, இலவச "டிவி', இலவச காஸ் என, கவர்ச்சி காட்டி வளர்ச்சியை முடக்கிவிட்டது.இதில் மக்களின் பங்கும் முக்கியம். நாம் இலவசத்திற்கு ஆசைப்பட்டதால் தான் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறோம். ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாசாரம் தமிழகத்தை, பிற மாநிலங்களின் முன் தலைக்குனிய வைத்துள்ளது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட, தேர்தல் கமிஷனின் கண்காணிப்பையும் மீறி வாக்காளர்களுக்கு, 100, 200 ரூபாய் என, பணம் வழங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆசைப்படுபவர்கள், வாக்காளர்களுக்கு தரும் 200 ரூபாய், நாள் ஒன்றுக்கு, 11 காசு என்ற கணக்கில் வருகிறது. காசை வாங்கிவிட்ட மக்கள், தங்களது உரிமைகளை எப்படி கேட்டுப்பெற முடியும்?

ஓட்டுக்காக பணம் பெற்றவர்கள், "பாஞ்சாலியை வைத்து சூதாடிய மகாபாரதத்து தருமன் போல்' மாநிலம் துகில் உரியப்படும் போது, கையாலாகாதவர்களாக கலங்கி நிற்கும் நிலைக்கு தள்ளப்படுவர்.எனவே, மின்வெட்டு நாள் முழுக்க அமல்படுத்தப்பட்டாலும் கேட்க நமக்கு தகுதியில்லை என, ஆளுவோர் அலட்சியப்படுத்துகின்றனர்.மக்கள் நலனில் அக்கறை இல்லாத மக்கள் பிரதிநிதிகளை திரும்பப்பெறும் சட்டம் சில நாடுகளில் உள்ளது. அதுபோன்ற சட்டம் நம் நாட்டிலும் கொண்டுவரப்பட்டால், செயல்படாதவர்களை பதவியிலிருந்து வெளியேற்ற முடியும். அப்போது தான் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவர்.       
                                                            thankyou 





அரசின் இலவசமும்,மின்வெட்டும்...SocialTwist Tell-a-Friend